சென்னை: சங்கர் நகர் பகுதியில் விறகு கடை நடத்தி வந்த கணேசன் என்பவரை, விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்தது தொடர்பான வழக்கில் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இது குறித்து கணேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில், குண்டு வெடிப்பு சம்பவத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாத தன்னை கைது செய்து நான்கு நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்திருந்ததாகவும், இதுதொடர்பாக கியூ பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தவறு செய்யாமல் தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு இழப்பீடு வழங்கவும், அந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் உரிய நடைமுறைகளை பின்பற்றிதான் கைது செய்யப்பட்டதாகவும், சிறையில் இருந்த காலத்தில் குற்றச்சாட்டை சொல்லவில்லை எனவும், சட்டவிரோத காவலுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.