ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் என்ற மலைக்கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றால், இடையில் ஓடும் குரும்பூர் மற்றும் சர்க்கரைபள்ளத்தை கடந்தால் தான் கடம்பூர் பகுதியை வந்தடைய முடியும்.
எனவே, மாக்கம்பாளையம் முதல் கடம்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து சேவை தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று முறை இயக்கப்பட்டு வந்தது. அந்த பாதையும் பள்ளங்கள் நிரம்பிய மண்பாதையாக இருப்பதால், மழைக் காலங்களில் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்து சேவை முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
பள்ளிப் பாதையில் மழைநீர்: இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக குரும்பூர், சர்க்கரைப்பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சர்க்கரைப்பள்ளத்தைக் கடந்து செல்லும் மண்பாதை வெள்ளத்தால் மூடப்பட்டதால், அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஒன்றரை மாதங்களாக மாக்கம்பாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கடம்பூர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெம்போவில் தொங்கியபடி பயணம்: இதனால் இந்த 17 மாணவர்களும் பொதுமக்கள் பயன்படுத்தும் டெம்போவில் வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இதில் பொதுமக்களும் அதிகளவில் பயணிப்பதால் தினந்தோறும் மாணவர்கள் டெம்போ மேற்கூரையில் தொங்கியபடி 5 கிலோ மீட்டர் பயணித்து சர்க்கரைப்பள்ளத்துக்கு வரவேண்டியுள்ளது. மேலும், அங்கிருந்து கடம்பூர் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் அரசுப் பேருந்தை நேரத்திற்கு பிடித்தால் மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடியும் என வேதனையுடன் கூறுகின்றனர்.
பேருந்து வசதியின்மையால் பள்ளி படிப்பு வீணாவதா? பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் வீட்டுக்குச் செல்வதற்கு ஏற்ற பேருந்து வசதியில்லாத காரணத்தால், மதியம் 1 மணிக்கே வகுப்பில் இருந்து புறப்பட்டுச் செல்வதால் ஒரு நாளின் பாதி வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் போவதாக ஏக்கத்தோடு மாணவர்கள் கூறுகின்றனர்.
கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு? இதனால் பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்காக சர்க்கரைப்பள்ளத்தில் தற்காலிகமாக பாதை அமைத்து, அரசுப் பேருந்து இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், பள்ளி முடித்து மாலையில் வரும் பேருந்தில் பயணிக்க ஏதுவாக இருக்கும் என மாக்கம்பாளையம் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான வழக்கில் சிறப்பு வழக்கறிஞர்கள்"- முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு! -