தமிழ்நாடு

tamil nadu

நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற தயார் - சாஸ்த்ரா பல்கலைகழக வழக்கில் தமிழக அரசு பதில்

By

Published : Apr 6, 2022, 8:25 AM IST

அரசு நிலத்தில் 100 சதுர அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாலும் அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற தயார் என சாஸ்த்ரா பல்கலைகழகம் நிலம் கோரிய வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை - சாஸ்த்ரா பல்கலைகழக வழக்கில் தமிழக அரசு பதில்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை - சாஸ்த்ரா பல்கலைகழக வழக்கில் தமிழக அரசு பதில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனமான சாஸ்த்ரா பல்கலைகழகம் தனது நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக 31.37 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறது. அந்த நிலத்தை தனக்கே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தது. அரசு ஒதுக்கும் நிலத்திற்கு ஈடாக 36.16 ஏக்கர் மாற்று இடத்தை தருவதாகவும், சந்தை மதிப்பின் அடிப்படையில் 31 ஏக்கருக்கான விலை நிர்ணயம் செய்து அரசுக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தது.

அரசு தரப்பில் பல்கலைகழகத்தின் கோரிக்கை நிராகரிப்பட்டதால், கடந்த 2017 ம் ஆண்டு கல்வி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், அரசின் முடிவை உறுதி செய்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கல்வி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கல்வி நிறுவனம் நிவாரணம் பெற இந்த உத்தரவு தடையாக இருக்காது என தெரிவித்தது.

தொடர்ந்து கல்வி நிறுவனம் தமிழக அரசிடம் மீண்டும் நிலத்தை ஒதுக்கக்கோரி கோரிக்கை வைத்தது. கோரிக்கையை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, திறந்தவெளி சிறைச்சாலை அமைய இருப்பதால் அந்த இடத்தை தர தேவையில்லை என அரசுக்கு அறிக்கை அளித்தது. குழுவின் அறிக்கையை ஏற்ற தமிழக அரசு, சாஸ்த்ரா பல்கலைகழகம் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கர் நிலத்தை 4 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீஸை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைகழகம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ராஜா மற்றும் நீதிபதி சக்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு நிலம் 100 சதுர அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாலும் அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி நிறுவனம் என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளாக அரசு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைகழகம் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அனுமதிக்க முடியாது. நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார். சாஸ்த்ரா பல்கலை சார்பில், பல்கலைகழக நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால், 30 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க : உயர்நீதிமன்றம் முன்பே ஆக்கிரமிப்பா?-அதிரடி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details