1992க்கு பிறகு 2015இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. அதுவரை அந்த தொடரில் ஒரு தோல்வியையும் தழுவாமல் இருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.
2015, மார்ச் 26 சிட்னியில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. 48 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில், 50 சதவீத டிக்கெட்டுகளை இந்திய ரசிகர்கள் வாங்கினர். மேலும் இப்போட்டி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நிச்சயம் இந்திய அணி சிட்னியில் வெற்றிபெறும் என கூறப்பட்டது.
ஆனால், சிட்னி மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானம். ஏனெனில், இந்த மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு முறை மட்டுமே இந்தியா வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மற்ற 12 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.
இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கல் கிளார்க் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். சிட்னி மைதானத்தின் ராசியும், டாஸ் வென்றதையும் வைத்து பார்த்தால் ஆட்டத்தின் தொடக்கமே ஆஸி.க்கு சாதகமாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இருந்தது.
வார்னர் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஃபின்ச், ஸ்டீவ் ஸ்மித் இணை ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என கூறப்பட்ட சிட்னியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது சுழற்பந்துவீச்சும் பெரிதாக எடுபடவில்லை.
உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்த அதே ஃபார்மை ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்திலும் கடைபிடித்தார். அதன்பலனாக அவர் அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசினார். 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 105 ரன்களுடன் அவர் வெளியேற ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில், நிதானமாக விளையாடிய ஃபின்ச் 81 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 38.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன்பிறகு வாட்சன், கிளார்க் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஆட்டத்தின் இறுதியில் ஃபாக்னரும், மிட்சல் ஜான்சனும் அதிரடியாக விளையாட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 328 ரன்களைச் சேர்த்தது. அந்தத் தொடரில் அதுவரை விளையாடிய அனைத்து அணிகளையும் ஆல் அவுட் செய்துவந்த இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்யாமல் போனது. இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் விதமாக உமேஷ் யாதவ் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். பெரிதும் எதிர்பார்த்த முகமது ஷமி விக்கெட் எடுக்காமல் சொதப்பினார்.