தமிழ்நாடு

tamil nadu

’ கீழடியின் பெருமையை முதலமைச்சர் உலகறிய செய்வார்’ - அமைச்சர் பெரியகருப்பன்

By

Published : Feb 11, 2022, 7:16 PM IST

கீழடியின் பெருமையை 'தமிழ்நாடு முதலமைச்சர் உலகறிய செய்வார்' என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பெரியகருப்பன்
அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை: கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அகழாய்வு பணிகளை (பிப்.11) அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், 'கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

தொடக்க காலத்தில் கீழடியில் முதல் மூன்று கட்ட ஆய்வுகளை ஒன்றிய அரசு செய்தது. அதற்குப் பின், அவர்கள் அதில் நாட்டம் காட்டவில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்த போது தற்போதைய முதலமைச்சர் கீழடியில் தொடர்ந்து அகழாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நேரில் வந்து கீழடி அகழாய்வு தளத்தை பார்வையிட்டார். தொடர்ந்து சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியில் கீழடியைப் போல் தமிழ்நாட்டில் உள்ள தொல்லியல் தலங்களை மீட்டு பாரம்பரியத்தை வெளிக் கொண்டுவருவோம் என உறுதியளித்தார்.

அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

ரூ.5 கோடி ஒதுக்கீடு

அதனடிப்படையில் பணிகளை விரைவுபடுத்தினார். தற்போது 8ம் கட்ட அகழாய்வை தொடங்கியுள்ளோம். கடந்த காலங்களில் தொல்லியல் துறைக்கு 2 கோடி அளவில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடியாக அறிவித்துள்ளார்.

இன்னும் இந்த ஆய்விற்கான தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தேவைக்கு ஏற்ப தொல்லியல் துறைக்குப் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழர்களின் நாகரீகம் நேற்று இன்றல்ல 2,000 ஆண்டுகளுக்கு முன்பே நகர வாழ்க்கை, எழுத்தறிவு, படிப்பறிவு, ஆடை ஆபரணங்கள், ஆயுதம் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்கள் என்பதற்கான சான்றாக கீழடி அமைந்துள்ளது. கீழடியின் பெருமை வெளிக்கொண்டுவரும் வகையில் தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழமைவாய்ந்த கோயில் இரவோடு இரவாக அகற்ற முயற்சி: ஈரோடு அருகே பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details