“சிப்ஸ் ஏன் தூளா இருக்குது?” - தியேட்டரில் இளைஞர்கள் தகராறு! - Vaniyambadi Theater fight - VANIYAMBADI THEATER FIGHT
Published : May 14, 2024, 6:43 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் படத்தைப் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் இடைவேளையின் போது கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேண்டீனில் தின்பண்டங்கள் வாங்கச் சென்றுள்ளனர்.
அப்போது சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என இளைஞர்கள் கேட்டுள்ளனர். அதற்கு மாற்றிக் கொடுத்து விடுகிறோம் எனக் கூறிய நிலையில், இளைஞர்கள் ஊழியரைத் தாக்கி உள்ளனர். இதனைக் கண்ட மற்ற தியேட்டர் ஊழியர்கள் ஒன்று கூடி இளைஞர்களைத் தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் தகவல் அறிந்த தியேட்டர் மேலாளர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளார். போதையில் இருந்த இளைஞர்களுடன் வந்த மற்ற இளைஞர்கள், தாங்கள் செய்தது தவறுதான் என ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இளைஞர்கள் ஊழியரைத் தாக்கியதும், பின்னர் ஊழியர்கள் ஒன்று கூடி இளைஞர்களைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.