தஞ்சையில் மகளிர் தின கொண்டாட்டம்.. கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்களுக்குப் புடவை வழங்கி வாழ்த்து! - councillors and sanitation workers
Published : Mar 8, 2024, 2:39 PM IST
தஞ்சாவூர்: பெண்களின் சாதனை, கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து சாதனைகளையும் கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகத் தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில், ஜோதி அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் பிரபு ராஜ்குமார், தூய்மை பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அதிகாலையிலேயே நேரில் சென்று அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களைக் கூறினார். பின்னர் இனிப்புகள், புடவைகளைப் பரிசாக வழங்கினார். இதனையடுத்து தங்களுக்குப் பரிசு அளித்த ஜோதி அறக்கட்டளைக்குத் தூய்மை பணியாளர்கள் நன்றியினை தெரிவித்தனர்.
அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சியில் உள்ள 28 பெண் கவுன்சிலர்களுக்கு ஒரே மாதிரியான வண்ண புடவைகளை வழங்கி, மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக தஞ்சாவூர் மாநகராட்சியில் மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் இராமநாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி முன்னிலையில் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.