சத்தியமங்கலம் அருகே சாலையைக் கடந்த காட்டு யானை கூட்டம்! - காட்டு யானைகள் நடமாட்டம்
Published : Feb 18, 2024, 7:20 AM IST
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள், அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவத் தொடங்கியுள்ளதால், காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன.
இந்த நிலையில், நேற்று (பிப்.17) சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் அருகே, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், தனது குட்டிகளுடன் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றன.
யானைகள் சாலையைக் கடந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, வாகனங்களை சாலையில் நிறுத்தினர். காட்டு யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்து சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வனப்பகுதி சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மித வேகத்தில் பயணிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.