“அண்ணாமலை மாமா.. மோடி தாத்தாவை பார்த்தீங்களா?” - கோவை ரோடு ஷோவில் சுவாரஸ்யம் - Lok Sabha Elections 2024
Published : Mar 19, 2024, 4:09 PM IST
கோயம்புத்தூர்: கோவையில் நேற்று மாலை பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. சாய்பாபா கோயில் பகுதியில் துவங்கிய இந்த நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைந்தது. பிரதமர் மோடி அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில், சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஊர்வலமாக வந்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் காரில் வந்தனர். இந்த ரோட் ஷோவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த ரோட் ஷோ நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் நிறைவில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை ஒரு சிறுமி "அண்ணாமலை மாமா.. அண்ணாமலை மாமா.." என அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகம் ஆகிய இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஷர்மிதா என்ற சிறுமி, அண்ணாமலையைப் பார்த்து “அண்ணாமலை மாமா..” என்று அழைத்துக் கொண்டே இருந்துள்ளார்.
உடனடியாக அந்த சிறுமையை பார்த்து வந்த அண்ணாமலை “மோடி தாத்தாவ பார்த்தீங்களா” என கேட்டு, சிறுமியை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.