மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி திருவிழா கோலாகலம்! - Tiruvarur temples - TIRUVARUR TEMPLES
Published : Apr 11, 2024, 1:39 PM IST
திருவாரூர்: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முக்கிய வைணவத் தளங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பங்குனித் திருவிழாவின் 18 நாள் திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்தாண்டின் பங்குனிப் பெருவிழா கடந்த மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் ராஜகோபால சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், பங்குனித் திருவிழாவில் முக்கிய விழாவான வெண்ணைத்தாழி திருவிழா இன்று காலை தொடங்கியது. அதை ஒட்டி, ராஜகோபால சுவாமி வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில், வெள்ளிக் குடத்தை கையில் ஏந்தி வீதியுலா புறப்பட்டார். அப்போது பக்தர்கள் ‘கோபாலா கோவிந்தா’ என்ற பக்தி கோஷம் முழங்க, ராஜகோபால சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, இன்று மதியம் ராஜகோபால சுவாமிக்கு செட்டியார் அலங்காரமும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவைக் கண்டுகளிக்க மன்னார்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.