திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் திடீரென சரிந்த சிலை.. ஒருவர் காயம்! - Swami statue collapse
Published : May 22, 2024, 4:45 PM IST
சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த திங்கட்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, பவள வண்ண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
இதனையடுத்து, நாதஸ்வரம் மேளதாளங்கள் முழுங்க கோயிலைச் சுற்றி கருடர் வாகனத்தில் வலம் வந்த பெருமாள், ஆர்த்தி எடுக்கப்பட்டு கோபுர வாசல் திறக்கப்பட்டு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், கருட வாகனத்தை தூக்கும் போது தீடீரென ஒருபுறம் இருக்கும் தண்டு உடைந்து சாமி சிலை சாய்ந்து சரிந்தது. இதில் பட்டாச்சாரியார் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் உடனடியாக செயல்பட்டு சாமி சிலையைத் தூக்கி நிறுத்தினர். பின்னர், உடனடியாக கோபுர வாசல் மூடப்பட்டது.
இதனையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மீண்டும் வாசல் கதவு திறக்கப்பட்டு கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தின் உள்ளேயே சுவாமி சிலை சரிந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.