ஆடி அமாவாசை; களைகட்டும் காரையாறு சொரிமுத்து அய்யனால் கோயில்! - Nellai Sorimuthu Ayyanar Temple
Published : Aug 3, 2024, 3:47 PM IST
திருநெல்வேலி: பாபநாசம் அருகே காரையாறு வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில், இந்த ஆண்டின் ஆடி அமாவாசை நாளை (ஆகஸ்ட் 4) கொண்டாப்படுவதால், இன்றே பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், குடில்கள் அமைப்பதற்கு ஏதுவாக நேற்று ஒரு நாள் மட்டும் ஆட்டோ, வேன், லோடு ஆட்டோக்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பக்தர்களுள் ஒருவரான வெங்கடேஷ், “நேற்று முதல் பலர் கோயிலைச் சுற்றி தார்பாயைக் கொண்டு குடில்கள் அமைத்து தங்கி வருகிறோம். இந்த 3 நாட்கள் நிம்மதியாக உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து சமைத்து, அய்யனாரை வழிபட்டு மகிழ்கிறோம்” என்றார்.
மேலும் பேசிய கல்யாணி, “இங்கு பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதி மட்டும் அமைத்தால் நன்றாக இருக்கும். இரவு நேரத்தில் மின்விளக்கு வசதி குறைவாகவே உள்ளது” என்றார்.
அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், இதில் பாதுகாப்பு பணிக்காக 600 காவலர்கள் மற்றும் சுமார் 200 வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.