அப்படியே நிக்கனும்.. நிலைக்காட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாணவிகள்! - students awareness programme
Published : Mar 13, 2024, 3:40 PM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை தூய இக்னேஷியஸ் கல்வியல் கல்லூரியில், ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்வாக நிலைக்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு இயற்கை சூழலின் பன்முகத்தன்மையை காக்கும் சீரான செயல்முறைகள் என்ற கருத்தினை வலியுறுத்தி, நிலைக்காட்சிகள் நடத்தப்பட்டன.
பன்முகத்தன்மை கொண்ட தமிழ்நாட்டின் ஐந்து வகை நிலங்களை கருத்தியலாகக் கொண்டு, ஒவ்வொரு நிலத்திலும் இருக்கும் சூழலை விளக்கும் வகையில், இந்த நிலைக்காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை நிலங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, நிலைக்காட்சிகள் மூலம் மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காற்று மாசுபடுதல், நெகிழியை ஒழிப்பது, கழிவு நீர் மேலாண்மை, நீர் நிலைகளை பாதுகாப்பது, எதிர்காலத்தில் வேளாண்மையின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி மாணவிகள் நடத்திய இந்த நிலை காட்சி அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. இந்த நிலைக்காட்சிகளை மாநகரத்தின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் வந்து பார்வையிட்டனர்.