தூத்துக்குடி: பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து..அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு! - fire accident - FIRE ACCIDENT
Published : Apr 28, 2024, 7:32 AM IST
தூத்துக்குடி: தூத்துக்குடி, திரேஸ்புரம் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் பைபர் இழைகளைக் கொண்டு பொம்மை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பைபர் இழைகள் மற்றும் பிளாஸ்டிக் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் தீயில் கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. அதன்பின், மல மலவென தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பொம்மைகள் எரிந்து ஏற்பட்ட கரும்புகை ஏற்பட்டதன் காரணமாக, அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களிடம் எதுவும் அச்சப்பட வேண்டாம். உடனடியாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார். பின்னர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்புதுறையினர் அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.