மகாளய அமாவாசை சுருளி அருவில் குளித்து, பலிகர்ம பூஜைகள் செய்த பக்தர்கள்! - MAHALAYA AMAVASYA SURULI FALLS RUSH
Published : Jan 29, 2025, 2:03 PM IST
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த சுருளி அருவியில் ஆண்டுதோறும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, சித்திரை முதல் நாள், மகாளய அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் சிறப்பு பூஜையான பலிகர்ம பூஜை செய்யப்படும்.
இந்த பூஜையில் குடும்பத்தார்கள் தங்களின் மறைந்த முன்னோர்களை நினைவில் கொண்டு அவருக்காக பிரார்த்தனை செய்து, பரிகாரங்களை செய்து எள்ளுத் தண்ணீர் மற்றும் பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில், இன்று தை அமாவாசை என்பதால் சுருளி அருவியில் தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுருளி அருவி ஆற்றங்கரையில் பக்தர்கள் புரோகிதர்களை வைத்து தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்தனர். மறுபுறம் அங்கு சுற்றுலா வந்த பயணிகளும் சுருளி அருவியில் நீராடி மகிழ்ந்தனர். இதனால், இன்று சுருளி அருவி வழக்கத்தை விட அதிகமான கூட்டத்துடன் காணப்பட்டது.