Tamil Nadu Assembly Budget session: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் 3வது நாள் அமர்வு! - தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்
Published : Feb 14, 2024, 10:01 AM IST
|Updated : Feb 14, 2024, 12:19 PM IST
சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாள் அமர்வு நேற்று (பிப். 13) நடைபெற்றது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசாவின் முன்னாள் ஆளுநருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து அளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்றது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், இன்று (பிப். 14) தமிழக சட்டசபையில் 3வது நாள் அமர்வு நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இந்தத் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று முன்மொழிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து எம்எல்ஏக்களின் விவாதம் நடைபெற உள்ளது.