தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 கூட்டத்தொடரின் மூன்றாவது நாள்! சூடுபிடித்த அண்ணா பல்கலை., விவகாரம்! - TAMIL NADU ASSEMBLY 2025
Published : Jan 8, 2025, 9:32 AM IST
தமிழ்நாடு சட்டப்பேரவை 2025-இன் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாளான இன்று எதிர்கட்சி உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். அதேபோல, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் முகக்கவசம் அணிந்து வந்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2025, ஜனவரி 6 (திங்கட்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், தமிழ்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் ஒலிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி, ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார். அதனையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இந்நிலையில், ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்த சிறப்புத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 7) காலை 9.30 மணியளவில் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை உறுப்பினர்கள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.