ஜெயலலிதா 76வது பிறந்தநாள்; தஞ்சையில் நடைபெற்ற கோலப்போட்டியில் அதிமுக படங்கள்! - தஞ்சாவூர்
Published : Feb 24, 2024, 3:32 PM IST
தஞ்சாவூர்: முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் சேகர், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், அமைப்புச் செயலாளர் காந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து ரயிலடி பகுதிக்கு ஊர்வலமாக வந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், தெற்கு வீதியில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், தஞ்சையின் பல்வேறு பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளி மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் சரவணன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருஞானம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பயம் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்தாளை முன்னிட்டு, அப்பகுதி பெண்கள் வண்ணக் கோலம் வரைந்து கோலப்போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை நிர்வாகிகள் வழங்கினர்.