பணிகள் முடிந்தும் திறக்காத ரேஷன் கடை.. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காத்திருப்பு போராட்டம்! - people protest against ration shop
Published : Aug 30, 2024, 10:53 PM IST
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி வைத்தியலிங்காபுரம் கிராமப் பகுதியில், சுமார் 18 ஆண்டுகளாக நியாயவிலைக் கடை இயங்கி வந்துள்ளது. இந்த கடையில் 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
இந்நிலையில், கட்டட பராமரிப்புக்காக நியாயவிலைக் கடையை மற்றொரு இடமான படிக்காசுவைத்தான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டடத்திற்கு தற்காலிகமாக மாற்றி உள்ளனர். இதனால் கிராம மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், வைத்தியலிங்காபுரம் பகுதியில் இயங்கி வந்த நியாயவிலைக் கடையின் கட்டட பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், அதிகாரிகள் கடையை மாற்றாமல் தற்காலிக இடத்திலேயே இயக்கி உள்ளனர்.
தற்போது கடையை மாற்றக் கோரி அரசு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, வைத்தியலிங்காபுரம் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே இயங்கி வந்த நியாயவிலைக் கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பழைய கட்டடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.