பழனி அருகே கோயில் திருவிழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பிதழ்!
Published : Feb 3, 2024, 1:57 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கலை முத்தூர் ஸ்ரீ ஜகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில், வருகிற பிப்ரவரி 15 அன்று 12 வருடங்களுக்குப் பின்பு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவும் நடைபெற உள்ளது.
அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து தீச்சட்டி எடுத்தும், தீ குண்டம் இறங்கியும் அம்மனை வழிபடுவர். இந்த விழாவில் தமிழகத்தின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனிடையே, அவ்வூர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழை, சமூக நல்லிணக்கத்தோடு அங்குள்ள ஜமாத்தார், இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்டது.
பழனி முருகன் கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழையவும், மற்ற இந்துக் கோயில்களில் இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தை பின்பற்றுபவர்கள் கொடிமரம் தாண்டிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பழனி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.