பாபநாசம் பகுதியில் ஜோடியாக உலா வந்த கரடிகள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - bears roaming in tirunelveli - BEARS ROAMING IN TIRUNELVELI
Published : Apr 23, 2024, 12:12 PM IST
திருநெல்வேலி: பாபநாசம் அருகே முதலியார்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் உலா வந்த காட்சி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி, பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில், யானை, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, மலை அடிவாரத்திலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், பாபநாசம் அருகே முதலியார்பட்டி பகுதியில் நள்ளிரவில் 2 கரடிகள் ஜோடியாக சுற்றித் திரிந்துள்ளன. இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சாலையின் நடுவே கரடிகள் சுற்றி திரிவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முன்னதாக, கல்லிடைக்குறிச்சி பகுதியில் ஊருக்குள் உலா வந்த கரடியை பொதுமக்கள் விரட்டியபோது பெண் ஒருவரை கரடி தாக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே, இதனைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.