சூரிய ஒளியால் கமலின் ஓவியத்தை வரைந்து அசத்தும் மயிலாடுதுறை இளைஞர்! - Kamal Haasan Photo drawing - KAMAL HAASAN PHOTO DRAWING
Published : Oct 4, 2024, 9:41 AM IST
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தோப்புத் தெருவைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ். இவர் ஆசியாவின் முதல் சூரிய ஒளிக்கதிர் ஓவியர் ஆவார். பல்வேறு ஓவியங்களை சூரிய ஒளிக்கதிரை பூதக்கண்ணாடியில் குவித்து மரப்பலகையில் வரைந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், 1970 மற்றும் 80-களில் உள்ள கமல்ஹாசனின் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து மரப்பலகையில் சூரிய ஒளிக்கதிர் கொண்டு வரைந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், "நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகன். அவரது புகைப்படத்தை வரைந்து, அவரை நேரில் சந்தித்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு, அவரது 70 மற்றும் 80களில் உள்ள புகைப்படத்தை தேர்ந்தெடுத்து வரைந்து, தற்போது முழுமை பெற்றுள்ளது. இதை நான் வீடியோவாக எடுத்து எனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளேன். இந்த புகைப்படத்தை கூடிய விரைவில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, அவரிடம் கொடுத்து வாழ்த்துப் பெறுவேன். இது எனது நீண்ட நாள் கனவு. அது நிறைவேறும் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.