ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடரும் தடை! - HOGENAKKAL CAUVERY RIVER
Published : Oct 22, 2024, 3:41 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களாகவே நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 2 ஆயிரம் கன அடி அதிகரித்து 20 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் மெயின் அருவி பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே இந்த தடையானது அமலில் உள்ள நிலையில், இன்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.