புனித வெள்ளி; தூத்துக்குடி, தென்காசி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு! - good friday
Published : Mar 29, 2024, 6:59 PM IST
தென்காசி/ தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த தினம், புனித வெள்ளி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை அனுசரிக்கும் விதமாக, உலகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அந்த வகையில், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திலும், தென்காசியில் உள்ள பேராலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில், இயேசு சிலுவையை சுமப்பது போன்ற பெரிய திருச்சொருபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து. பேராலய பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோன்று, தூத்துக்குடி சின்ன கோயில் என்று அழைக்கக்கூடிய திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் ஆலயம், மிக்கேல் ஆதி தூதரர் ஆலயம், யூதா ததேயு ஆலயம், புனித வேளாங்கண்ணி மாதா ஆலயம், பாத்திமா மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதேபோல், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை, புளியங்குடி ஆகிய முக்கிய பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை திருப்பலிகள் நடைபெற்றது. மேலும், புனித வெள்ளியை முன்னிட்டு, பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், நன்றாக தேர்வு எழுதவும், மழை வேண்டியும், அன்பு சமாதானம் சகோதரத்துவம் நிலைக்க சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மேலும், அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளியை அனுசரிக்கும் விதமாக கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தவக்காலத்தின் கடைசியாக இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.