பக்ரீத் பண்டிகை: திண்டுக்கல் அய்யலூரில் ஒரே நாளில் ரூ.3.5 கோடி வியாபாரம்! - bakrid festival goat sales - BAKRID FESTIVAL GOAT SALES
Published : Jun 13, 2024, 1:42 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருவது வழக்கம். அங்கு ஆடுகள், நாட்டுக்கோழி, காய்கறிகள் ஆகியவை அதிகாலை நான்கு மணி முதல் விற்பனைக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும்.
இந்நிலையில் வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று அதிகாலை 3 மணிக்கே ஆட்டுச் சந்தை கூடியது. சந்தையில் திருச்சி, மணப்பாறை, புத்தாநத்தம், செந்துறை, மதுரை, அரவக்குறிச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆடுகளை வாங்க வாடிக்கையாளர்கள் வந்தனர்.
ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஆடுகளை வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கி சென்றனர். பக்ரீத் பண்டிகைக்காக 40 கிலோ வரையிலான ஆடுகள் அதிக அளவில் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன.
இன்று நடைபெற்ற அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு 10 முதல் 11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.7500 முதல் ரூ.8000 வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகை ஒட்டி நடைபெற்ற அரியலூர் ஆட்டுச் சந்தையில் 3.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.