அரிக்கொம்பன், படையப்பா வரிசையில் புது யானை.. 20வது முறையாக ஒரே கடை சூறையாடல்! - Elephant attack ration shop - ELEPHANT ATTACK RATION SHOP
Published : Jun 11, 2024, 2:18 PM IST
மூணாறு: கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் கடந்த சில மாதங்களாகவே அரிக்கொம்பன், படையப்பா, சக்க கொம்பன் என்ற பெயர்களைக் கொண்ட காட்டு யானைகள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதும், அவற்றை காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் போராடுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், மூணாறு குடியிருப்புப் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து அங்கிருந்த ரேஷன் பொருட்களை காட்டு யானை ஒன்று எடுத்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே கடையில் தான் கடந்த சில மாதங்களாகவே அரிக்கொம்பன் உள்ளிட்ட காட்டு யானைகள் சூறையாடியுள்ளது. இதுவரை இந்த கடையின் கதவை யானைகள் 19 முறை உடைத்து பொருட்களை எடுத்துச் சென்றுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது அரிக்கொம்பன், படையப்பா யானை வரிசையில், புதிய யானை ஒன்று 20வது முறையாக, அதே ரேஷன் கடையின் கதவை உடைத்து, பொருட்களை எடுத்துக் கொண்டு, தனது குட்டியுடன் அங்கிருந்து செல்லும் காட்சி அருகே இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.