உச்சகட்ட போதையால் சாலையில் தள்ளாடிய இளம்பெண்.. முகம் சுழித்த பொதுமக்கள்!
Published : Feb 3, 2024, 5:25 PM IST
திண்டுக்கல்: வேடசந்தூர் ஆத்துமேடு ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையின் ஓரமாக இளம்பெண் ஒருவர், மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள், அந்தப் பெண்ணை மீட்டுள்ளனர். அப்போது அந்தப் பெண் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போதை தெளிவதற்காக பொதுமக்கள் அப்பெண்ணின் முகத்தில் தண்ணீரை ஊற்றியுள்ளனர்.
அப்போது கண் முழித்த அப்பெண்ணிடம், அவரது விவரங்கள் குறித்து பொதுமக்கள் விசாரித்துள்ளனர். போதையில் இருந்ததால் பதில் கூறாமல் தள்ளாடியபடியே பரபரப்பான சாலையின் நடுவே நடக்கத் தொடங்கி உள்ளார். அவ்வழியாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், அந்த இளம்பெண் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் மதுபோதை உச்சத்திற்குச் சென்று நடக்க முடியாமல் சாலையில் ஓரமாக நின்றிருந்த வாகனத்தில் சாய்ந்தபடி அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மீண்டும் மயக்கம் தெளிந்த அந்த இளம்பெண், அவ்வழியாக ஒட்டன்சத்திரம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். பரபரப்பான சாலையில் இளம்பெண் மது அருந்திவிட்டு சாலையின் நடுவே சென்று, வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.