வடை சுட்டு வாக்கு சேகரித்த திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா! - pmk campaign at Dindigul - PMK CAMPAIGN AT DINDIGUL
Published : Mar 31, 2024, 5:24 PM IST
திண்டுக்கல்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா, இன்று (மார்.31) தனது முதற்கட்ட பிரச்சாரத்தைச் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடைகள் சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அந்த வகையில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாமக சார்பில் வேட்பாளர் திலகபாமா இன்று தனது முதல் கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் பிரச்சாரத்தைத் தொடங்கிய திலகபாமா, மேளதாளங்கள் முழங்கச் சாலைகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில், சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பணியாரம் மற்றும் வடைகள் சுட்டு அசத்தி நூதன முறையில் வேட்பாளர் திலகபாமா மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த தொகுதியில் உள்ள அமைச்சர்களோ மற்ற கட்சி நிர்வாகிகளோ இந்த பகுதிக்கு வந்திருக்க மாட்டார்கள். அதனால் தான் நான் இந்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, எனது முதல் கட்ட பிரச்சாரத்தைத் துவங்குகிறேன். திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஐ.பெரியசாமியை அழைத்து வருகிறார்கள், அவர் ஜூலை 31ம் தேதி முதல் சிறை பறவையாகிவிடுவார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பாராளுமன்ற உறுப்பினரைக் கூட அழைத்து வர தைரியமில்லை.
இரட்டை இலை, இரட்டை இலை என்று ஒன்று இருந்தது, அது இப்போது துரோகத்தினால் மண் மூடி கிடக்கிறது. அவர்கள் ஒருத்தரைக் கூட்டி வருகிறார்கள், அவர்களுக்குப் பிரதமர் யார் என்று தெரியவில்லை, இவர்கள் ஏன் தேர்தலில் நிற்க வேண்டும், ஒட்டு வாங்க வேண்டும் என்பதற்காக. ஆகையால் மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றால் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்”, என பேசியுள்ளார்.