100 சதவீதம் வாக்குப்பதிவு; ‘என் வாக்கு என் உரிமை’ குறித்து நெல்லையில் 1,500 மாணவிகள் விழிப்புணர்வு! - students awareness about vote
Published : Mar 12, 2024, 9:02 AM IST
திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், என் வாக்கு என் உரிமை என 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 1500 கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து, வாக்குப்பதிவு செய்து கைவிரல் மைய அடையாளம் காட்டும் வடிவம் போன்று அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தினர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான், வினாடி வினா, ஓவியம் வரைதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது .
அந்த வகையில், பேட்டை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 1,500 பேர் ஒன்றிணைந்து, 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழைப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், என் வாக்கு என் உரிமை என விளக்கும் வகையில், வாக்குப்பதிவு செய்து கைவிரல் மைய அடையாளம் காட்டும் வடிவம் போன்று அமர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, என் வாக்கு என் உரிமை, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், பயிற்சி ஆட்சியர் கிஷன்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.