மதுபோதையில் சிசிடிவி கேமராவை உடைத்த மர்ம நபர்.. வெளியான சிசிடிவி காட்சி.. - A drunken man broke a CCTV camera - A DRUNKEN MAN BROKE A CCTV CAMERA
Published : May 18, 2024, 6:56 PM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் ராமர் கோயில் வீதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அப்பகுதி மக்கள் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுபோதையில் அவ்வழியே வந்த நபர் ஒருவர் சிசிடிவி கேமராவை கல்வீசி உடைத்துள்ளார்.
இதனைத் தடுக்க வந்த நபர்களையும் தாக்கியதோடு, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களையும் அந்த நபர் தாக்கியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் உடைந்த சிசிடிவி கேமராவிற்கு அருகிலிருந்த மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த நபர் மதுபோதையில் சாலையில் நடந்து செல்வதும், அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதும், பின்னர் திடீரென அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை நோக்கி ஓடி வந்து சிசிடிவி கேமராவை பார்த்து ஏதோ திட்டியவாறு கீழே கிடந்த கல்லை எடுத்து சிசிடிவி கேமராவை உடைத்ததும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சிசிடிவி கேமராவை உடைத்த அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் அந்த மர்ம நபர், சம்பவம் நடந்த தெருவில் உள்ள நகைக் கடை அல்லது வேறு ஏதேனும் ஒரு கடையில் கொள்ளையடிக்க வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.