"பம்பரம் சுத்தாது, குக்கர் விசில் அடிக்காது..திருச்சியில் இரட்டை இலை மட்டுமே துளிரும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் - Trichy Lok Sabha - TRICHY LOK SABHA
Published : Mar 27, 2024, 12:57 PM IST
புதுக்கோட்டை: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் கருப்பையா நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.
புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்லாது தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும், அக்கூட்டத்தில் வேட்பாளர் கருப்பையா, தனக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டுமென தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் களத்தில் அதிமுகவைத் தவிர அங்கீகரிக்கப்பட்ட கட்சி எதுவுமே இல்லை. எனவே, அதிமுக வேட்பாளரின் வெற்றி பிரகாசமாக உள்ளது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக துடிப்பு மிக்க, படித்த இளைஞரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்துள்ளார்.
எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட செய்து முடிக்கும் வேட்பாளர் கருப்பையா. இவர் அமோக வெற்றி பெற்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி. மேலும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நமக்கு சாதகமாக உள்ளது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பம்பரம் சுத்தாது, குக்கர் விசில் அடிக்காது; ஆனால், இரட்டை இலை துளிர்வது உறுதி" எனப் பேசினார். இதனிடையே, திருச்சியில் போட்டியிடுதாக இருந்த இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கான 'பம்பரம்' சின்னத்தை ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.