வாணியம்பாடியில் எருது விடும் விழா கோலாகலம்..! 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு..! - bull race
Published : Feb 16, 2024, 2:25 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆந்திர மாநிலம் குப்பம், வீரண மலை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்குப் பின்னர் எருதுகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட இலக்கை குறைந்த மணித்துளிகளில் கடந்த காளையிற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.70 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.60 ஆயிரமும் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், இந்த எருது விடும் விழாவை மைதானத்தில் அமர்ந்து பார்ப்பது போல் அப்பகுதியில் உள்ள சிறுகுன்றுகளின் மீது அமர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
முன்னதாக, கடந்த பிப்.7ஆம் தேதி நடைபெற இருந்த எருது விடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்காத நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி பெற்று இன்று எருது விடும் விழா நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.