திருச்சி குங்குமவல்லி அம்மனுக்கு 74-வது ஆண்டு வளைகாப்பு திருவிழா! - trichy news
Published : Feb 3, 2024, 1:04 PM IST
|Updated : Feb 6, 2024, 6:52 PM IST
திருச்சி: உறையூர் குங்குமவல்லி உடனுறை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை 3-வது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று குங்குமவல்லி அம்மனுக்கு 74-வது ஆண்டு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி, குங்குமவல்லி தாயாருக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வளையல்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, அபிஷேக ஆராதனைகளும், ஹோம பூஜையும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதனையடுத்து, குங்குமவல்லி தாயாருக்கு அர்ச்சனை செய்யப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் திருவுருவப்படம் ஆகியவை கர்ப்பிணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
குங்குமவல்லி அம்மன் வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து கோயில் நிர்வாகி ஹரிஹர குருக்கள் கூறியதாவது, “ 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் அடைய வேண்டி அம்மனுக்கு வளையல் சாற்றும் நிகழ்வு நடைபெற்றது. 2ஆம் நாள் விழாவில், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு, அம்மனுக்கு 48 நாள் பூஜை செய்த மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்படும்.
அதே போன்று, 3ஆம் நாள் விழாவில், மாங்கல்யம் பாக்கியம் வேண்டுபவர்களுக்கு, விரைவில் திருமணம் நடைபெறவும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்து, இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்” என்று கூறினார்.