பட்டியலின மாணவி மீதான தாக்குதல்.. தஞ்சாவூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - தஞ்சாவூர் செய்திகள்
Published : Feb 2, 2024, 10:39 AM IST
தஞ்சாவூர்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளது தொழில் முதலீட்டை ஈர்க்க அல்ல, பணத்தை முதலீடு செய்வதற்கு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டியலின பணிப்பெண் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்ததன் பேரில், நேற்று (பிப்.1) கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட தலநகரங்களில் நடைபெற்றது. அந்த வகையில், தஞ்சாவூரில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளருமான நாகப்பட்டினம் ஜெயபால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ (JACTO-GEO) அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தமிழக அரசு பயிர்க் காப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கவில்லை. திமுக வெற்றிபெறுவதற்கு அரசு ஊழியர்கள் காரணம்.
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று 34 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டது. அதில், ரூ.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது என்று பெருமையாக கூறியுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளது தொழில் முதலீட்டை ஈர்க்க அல்ல, பணத்தை முதலீடு செய்வதற்கு” என்று குற்றம்சாட்டினார்.