கோத்தகிரி அருகே வீட்டில் இருந்த நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை.. திக் திக் காட்சிகள்! - அண்மைச் செய்திகள்
Published : Jan 23, 2024, 5:30 PM IST
நீலகிரி: உதகை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகள் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டு உள்ளது. அதனால் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு உலா வருகின்றன.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மதிய வேளையில் கோத்தகிரி அருகே கூக்கள் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களா வாசலில் படுத்திருந்த வளர்ப்பு நாயை பின்பக்கமாக வந்த சிறுத்தை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வளர்ப்பு நாய் சிறுத்தையின் பிடியிலிருந்து தப்பித்தது. இந்த பங்களா குன்னூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் மேலாளரின் பங்களா என கூறப்படுகிறது.
மேலும், சிறுத்தை நாயை கவ்வி இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் நடந்த இடம் கட்டப்பெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் வன அதிகாரி செல்வகுமாரின் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே வர வேண்டாம் என்றும் சிறுத்தையை கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.