சென்னை:இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் கடந்த ஜன் மாதம் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர். இருவரும் அதே விண்கலம் மூலம் 10 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட சிறிய பழுதால், இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கியிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேலாக விண்வெளியிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என நாசா கூறியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இஸ்ரோ செயற்கைக் கோள் மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையிடம் (Mylswamy Annadurai) ஈடிவி பாரத் கேள்விகளை முன்வைத்தது.
இதற்கு பதிலளித்த அவர்," விண்வெளி பயணத்திற்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, உடல் மற்றும் மனரீதியாக பலகட்ட பயிற்சிகளை அளித்த பின்னரே விண்வெளிக்கு அனுப்புகின்றனர்" என குறிப்பிட்டார். சுனிதா வில்லியம்ஸ் ஏற்கெனவே விண்வெளி அனுபவம் கொண்டவர் என்பதை குறிப்பிட்ட மயில்சாமி அண்ணாதுரை(Mylswamy Annadurai) தற்போது போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் முதன்முறையாக விண்வெளிக்கு மனிதர்களை சுமந்து சென்ற நிலையில், இத்தகைய சவாலான பணிக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட காரணம், அவரது அனுபவம் தான் என சுட்டிக்காட்டினார்.
சிறிய பழுது ஏற்பட்ட போதிலும் தற்போது சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்கலம் சென்றடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய மயில்சாமி அண்ணாதுரை, இந்த ஆய்வு மையமும் பல வீரர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகளைக் கொண்டுள்ளது என குறிப்பிட்டார். மாற்று வழிகள் குறித்து விளக்கிய அவர், "திட்டமிட்டவாறு 10 நாட்களில் சுனிதா வில்லியம் மற்றும் பேரி வில்மோர் பூமிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும், திரும்ப ஸ்டார்லைனரை சரி செய்ய முடியுமா என்பதை யோசிக்கிறார்கள். அவ்வாறு சரி செய்ய முடியவில்லை என்றாலும், மாற்று வழிகளில் அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன".
எற்கெனவே விண்வெளியில் 500 நாட்கள் 1000 நாட்களைக் கடந்து தங்கியிருந்தவர்கள் உண்டு எனக் கூறிய மயில்சாமி அண்ணாதுரை, இதற்கான அனுபவமும், திறமையும் மிக்கவர்தான் சுனிதா வில்லியம் என்பதால் இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை எனக் கூறினார்.
விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருப்பது குறித்த சுவாரஸ்யமான ஒரு தகவலை நினைவு கூறலாம். 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் சார்பில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்ற வீரர்கள், கிட்டத்தட்ட 311 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தனர். செர்கெய் கிரிகாலேவ் மற்றும் அலெக்சாண்டர் வால்கோவ் (Sergei Krikalev, Alexander Volkov)என்ற அந்த இரண்டு வீரர்களும் சோயுஸ் டிஎம் -12 (Soyuz TM-12) விண்கலம் மூலம் 1991ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி விண்வெளிக்குச் சென்றிருந்தனர். இவர்கள் 1992ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பூமிக்குத் திரும்பினர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இவர்கள் புறப்படும் போது சோவியத் யூனியனாக இருந்த நாடு, திரும்ப வரும் போது பூமியில் நிகழ்ந்த அரசியல் பிரச்சனைகளால் சோவியத் யூனியன் உடைந்து ரஷ்யாவாக மாறியிருந்தது.
விண்வெளி அனுபவம் எப்படி இருக்கும்?:விண்வெளியில் மாதக்கணக்கில் தங்குவது என்பது முடிவாகிவிட்டது. விண்வெளியில் வீரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ஐரோப்பிய விண்வெளி முகமையின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கலாம். பொதுவாக நாம் ஏதாவது டிரிப் போனால் என்ன செய்வோமோ, அதே போன்றுதான் விண்ணுக்கு செல்லும் வீரர்கள் ஆடை, உணவு தேவையான பொருட்களை எடுத்து செல்லுவார்கள். இவர்கள் அங்கு எப்படி குளிப்பார்கள்? என்ன சாப்பிடுவார்கள்? எங்கு இயற்கை உபாதை கழிப்பார்கள் என அடிப்படையான சந்தேகங்கள் எழுந்திருக்கலாம்.
பல்துலக்குவது எப்படி?: விண்ணில் பூமியை போல் புவி ஈர்ப்பு சக்தி இல்லை எனவே அனைத்தும் காற்றில் மிதக்கதான் செய்யும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். வீடியோக்களிலும் பார்த்திருப்போம். பூமியில் பல் துலக்கிவிட்டு துப்பி விடலாம். ஆனால் விண்வெளியில் பல்துலக்கி துப்பினால் எச்சில் மிதக்கும். எனவே பற்பசையை பல்துலக்கிய பின் அப்படியே உண்ணும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த பற்பசை துளிகளை பற்களுக்குள் வைத்து வெளியே வராத வகையில் வாயை திறக்காமல் பற்களை துலக்க செய்கின்றனர். பின் அதை விழுங்குகின்றனர். இதற்கு காரணம் பற்பசை விண்ணில் பறந்து நாசம் செய்யக்கூடாது என்பதற்காகதான். பின்னர் பற்களை காகிதம் (Tissue Paper) போன்ற ஈரமான துடைப்பால் சுத்தம் செய்யகின்றனர்.
எங்கே இயற்கை உபாதைகளை கழிப்பார்கள்?பொதுவாக விண்கலத்தில் கழிப்பறையாக உறிஞ்சும் குழாய் (Sucking Tube) அமைக்கப்படும். அந்த குழாய்கள் மூலம் கழிவுகளை வேதிப்பொருட்களின் துணையோடு ஆவியாக்கப் படுகிறது. சிறுநீர் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் (ISS) இரண்டு கழிப்பறைகள் உள்ளன, ஒன்று ரஷ்ய நாட்டின் வடிவமைப்பிலும் மற்றொன்று அமெரிக்க வடிவமைப்பிலும் உள்ளன.
விண்வெளி வீரர்கள் குளிப்பார்களா?:விண்வெளி மையத்தில் வெப்பநிலையானது சரியான விதத்தில் பராமரிக்கப்படுவதால், வியர்வை பெரிதாக ஏற்படாது. எனவே விண்வெளி வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் உடைகளை சில வாரங்களுக்கு மாற்ற தேவைப்படாது. உள்ளாடைகளை மட்டும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் மாற்றிக் கொள்வார்கள். உடலை சுத்தப்படுத்த பிரத்யேக டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தப்படும்.