ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ மூத்த விஞ்ஞானியும், திரவ எரிபொருள் உந்து மைய (Director, Liquid Propulsion System Center) இயக்குநருமான முனைவர் வி.நாராயணன் ஈடிவி பாரத்துக்கு அளித்த தகவல்களில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வி.நாராயணன் அளித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் தனித்துவம்: எஸ்எஸ்எல்வி என்பது ஸ்மால் சாட்டிலைட் லாஞ்சிங் வெஹிக்கிள் (Small Satelite Launching Vehicle) ஆகும். இஸ்ரோவைப் பொறுத்தவரை 6 தலைமுறை லாஞ்சிங் வெஹிக்கிள்களை டெவலப் செய்திருக்கிறோம்
இதுவரை
1. SLV 3
2. ASLV
3. PSLV
4. GSLV Mark 2
5. LVM 3
6. SSLV
இதில் ஏற்கெனவே
1. PSLV
2. GSLV
3. LVM 3 ஆகிய ராக்கெட்டுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தற்போது 4வது தலைமுறை லாஞ்ச் வெஹிக்கிளாக SSLV ராக்கெட் ஆபரேஷனல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதற்கு முந்தைய ராக்கெட்டுகள் அதிக திறன் உடையவை. உதாரணத்திற்கு எல்.வி.எம்.3 ராக்கெட் 8,500 கிலோ எடையை லோ எர்த் ஆர்பிட் எனப்படும் தாழ்வட்டப்பாதையிலும், 4,200 எடையை ஜியோ டிரான்ஸ்பர் ஆர்பிட் எனப்படும் புவியின் உயர்வட்ட சுற்றுப்பாதையிலும் நிலை நிறுத்தும் வல்லமை கொண்டவை. ஆனால் எஸ்.எஸ்.எல்.வி. 500 கிலோ எடை மட்டுமே அதிகபட்சமாகக் கொண்டு செல்லும். வணிக ரீதியாக இஸ்ரோ செயல்படும் போது, ஒரு வாடிக்கையாளருக்கு திடீரென செயற்கைக் கோளை அனுப்ப வேண்டும் என்றால் ஒரே வாரத்தில் ராக்கெட்டை தயார் செய்து விண்ணில் ஏவ முடியும்.
ககன்யானுக்கு முன்னோட்டமான ஆராய்ச்சி:தற்போது ஏவப்பட்டுள்ள SSLV D3 ராக்கெட் மூலம் சிலிக்கன் கார்பைடு பேஸ்டு யுவி Dosimeter என்ற முக்கியமான செயற்கைக் கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளியில் பயணிக்கும் போது அவர்களின் மீது விண்வெளியில் கதிர்வீச்சுக்கள் விழும். இந்த அளவீடு கருவி அத்தகைய கதிர்வீச்சின் அளவை அளவிட பயன்படும்.
ககன்யான் ஆராய்ச்சியின் நிலை என்ன? ககன்யான் திட்டத்தில் மனிதர்கள் பயணிக்க உள்ளதால், அனைத்து பாகங்களும் மனிதர்களை சுமந்து செல்லும் போது, அவர்களை பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். ககன்யானில் 3 முக்கிய கட்டங்கள் உள்ளன. முதலாவதாக ராக்கெட், மனிதர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் (Human Rating) என்ற நிபந்தனையை ராக்கெட்டுகள் பூர்த்தி செய்துள்ளன, அதாவது திட எரிபொருள் என்ஜின் (Solid Engine), திரவ எரிபொருள் என்ஜின் (Liquid Engine), கிரையோஜெனிக் என்ஜின் (Cryogenic Engine) என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இரண்டாவதாக ஆர்பிட்டர் மாட்யூல் எனப்படும், மனிதர்கள் அமர்ந்து பயணிக்கக் கூடியது. இதனை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்து ஆபத்துக்காலங்களில் மனிதர்களை காப்பாற்றும் அமைப்பு (Crew Escape System) இதற்கான சோதனை கடந்த ஆண்டில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கடைசியில் Vyomithra என்ற ரோபோட்டை அனுப்பி சோதனை செய்வோம். அடுத்த ஆண்டில், மீண்டும் 2 முறை மனிதர்கள் இல்லாமல் ராக்கெட் அனுப்பப்படும், 2025ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது தான் எங்களின் நோக்கம்.
குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் எப்போது? இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தயாராகிவிடும். ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகாமையில் இலங்கை இருப்பதால் அதனைத் தாண்டிச் செல்லும் வகையில் ராக்கெட்டுகளை ஏவ முடியாது. போலார் துருவத்திற்கான ராக்கெட்டுகளை ஏவலாம். இலங்கைக்கு மேலே பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பாதையை சற்று திருப்பி விட வேண்டிய நிலை வரும், அப்போது சாட்டிலைட்டுக்கான எடையை குறைக்க வேண்டியது வரும்.
இதையும் படிங்க:விறுவிறுப்படையும் ககன்யான் திட்டம்.. ஆளில்லா சோதனை குறித்து சோம்நாத் முக்கிய தகவல்!