கலிபோர்னியா: டெக் நிறுவனங்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பும், மறு தரப்பில் பெரும் ஆதரவும் கிடைத்த ‘ஏஐ பாதுகாப்பு மசோதா’ (AI Safety Bill) கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் (California Governor Gavin Newsom) நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவில் வரம்பற்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று கடும் நெருக்கடிகளை கொடுத்து ஓபன் ஏஐ (Open AI), கூகுள் (Google), மெட்டா (Meta) போன்ற நிறுவனங்கள் மசோதாவை எதிர்த்தன.
இதற்கிடையில், சட்டத்திற்கு ஆதரவாக உலகப் பணக்காரரான டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், வரையறுக்கப்படாத எந்த தொழில்நுட்பமும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், நெருகடிகளை தற்காலத்தில் தவிர்க்க கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் மசோதாவை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
ஆளுநர் நியூசம் ஏன் மசோதாவை நிறுத்திவைத்தார்?
AI நிறுவனங்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, அவை நவீனமயமாவதில் சட்டங்கள் தடையாக இருக்கும் என்று நியூசம் கூறினார். மேலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கும்பட்சத்தில், ஏஐ வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டு, நிறுவனங்கள் மாநிலத்திலிருந்து வெளியேறக்கூடிய சூழல் ஏற்படும் என்றார்.
இதில், சாதாரண AI பயன்பாடுகள் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த AI முறைகளை ஒரே விதமாகக் கையாள்வது தவறானது என தான் நம்புவதாகத் தெரிவித்தார். மசோதாவிற்கு தடை விதித்தது சரியான முடிவு என மெட்டா நிறுவனத்தின் ஏஐ ஆய்வாளர் யான் லீகன்(Yann LeCun) நன்றி தெரிவித்து தனது எக்ஸ் (formerly Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மசோதா முன்மொழிந்த ஏஐ பாதுகாப்புத் திட்டங்கள்?
இந்த மசோதாவை உருவாக்கிய செனட்டர் ஸ்காட் வீனர், சில முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்தார்:
- மேம்பட்ட AI மாடல்களுக்கு பாதுகாப்பு சோதனை: சக்திவாய்ந்த AI முறைகளை பயன்படுத்துவதற்கு முன்னர், அவற்றை பாதுகாப்பானவையாக உருவாக்க வேண்டும்.
- கில் ஸ்விட்ச் (Kill Switch): AI பயன்பாடுகள் தவறான முறையில் செல்லும்போதோ, மக்களை அதிகளவு பாதிக்கக்கூடியதாக மாறும்போதோ, அதை நிறுத்துவதற்கு “கில் ஸ்விட்ச்” அவசியம்.
- அதிகாரபூர்வ ஒழுங்கு (Official Oversight): மிகவும் சக்திவாய்ந்த AI தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்கள் அரசாங்க கண்காணிப்பில் செயல்பட வேண்டும்.
ஆனால், ஆளுநர் நியூசம் இந்த மசோதா தேவைக்கேற்ப திட்டமிடப்படவில்லை எனக் கருதினார். உதாரணமாக, AI உயர்-ஆபத்து சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகிறதா அல்லது அதில் நுட்பமான தரவுகள் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை மசோதா கருத்தில் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, அனைத்து AI முறைகள் மீதும், மிகக் கடுமையான விதிகளைச் சுமத்துவது ஏற்புடையதாக இல்லை எனத் தெரிவித்தார்.