வாசிங்டன்: சமூக வலைத்தளங்களில் கரோனா தொடர்பான கன்டென்ட் அடங்கிய பதிவுகளை தணிக்கை செய்யக் கூறி பைடன் ஹாரிஸ் நிர்வாகம், மெட்டா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) குடியரசுக் கட்சியின் நீதிக் குழுவிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, "மெட்டா போன்ற நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு எப்படி செயல்படுகிறது என்பது குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது. இதில் எங்கள் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நான் தெளிவாக்க விரும்புகிறேன்.
எங்கள் சமூக வலைத்தளங்கள் எல்லோருக்குமானது. நாங்கள் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கிறோம். அதே நேரத்தில், பயனர்களை பாதுகாப்பான வகையில் எங்கள் தளத்தில் இணைக்கிறோம். இது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் பலரிடம் இருந்து கருத்தையும் பெற்று வருகிறோம்.
கடந்த 2021ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டனர். கரோனா தொடர்பான சில பதிவுகளை தணிக்கை செய்யுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதில் விமர்சிக்கும் வகையிலான பதிவுகளும் அடங்கும். மேலும் அவர்கள் கூறியதுபோல, நாங்கள் தணிக்கை செய்ய மறுத்த போது அதிபர் பைடனின் நிர்வாகம் எங்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது.