டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் தங்களின் புதிய மேம்படுத்தப்பட்ட சுவிதா 2.0 செயலியின் (Suvidha 2.0 Mobile App) பதிப்பை வெளியிட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளுக்கான அனுமதியை பெற முடியும்.
பரப்புரைகளுக்கான அனுமதியைப் பெற இதில் பதிவுசெய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, இந்த ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பில் வரும் புதுப்பிப்புகளை அறிய இந்த செயலி உதவுகிறது. தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை இனி எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.
விரல் நுனியில் தகவல்கள்:
முன்னதாக, வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் பழைய சுவிதா செயலியில் அவர்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புதல்களை மட்டுமே கண்காணிக்க முடியும். அதில் அனுமதி கோருவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதி கோருவதற்கான விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறை அல்லது இணையதளத்தின் வாயிலாக மட்டுமே பதிவுசெய்ய முடியும்.
மேம்படுத்தப்பட்ட சுவிதா 2.0 செயலி பரப்புரைத் தொடர்பான அனைத்து அனுமதிகளைத் தேடுவதற்கும், கண்காணிப்பதற்கும், அனுமதிகளை பதிவிறக்கம் (Download) செய்வதற்கும் ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டத் தீர்வாகும். இவை மட்டும் அல்லாமல், இந்த செயலியின் வாயிலாக தேர்தல் ஆணையத்தின் நிகழ்கால அறிவிப்புகள், ஆணைகளை சரியான நேரத்தில் விரல் நுனியில் பெறும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.