கலிஃபோர்னியா: உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள், தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக (CFO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவன் பரேக் (Kevan Parekh) என்பவரை நியமித்துள்ளது. தற்போது ஆப்பிளின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் துணைத் தலைவராக உள்ள கெவன் பரேக், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஆப்பிள் நிர்வாகக் குழுவின் தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்பார் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், "கெவன் பரேக் சுமார் 11 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் நிதி தலைமைக் குழுவில் இன்றியமையாத உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், அவரது கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் நிதிநிலைகளில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்கும் திறமை ஆகியவையே கெவன் பரேக்கை ஆப்பிளின் அடுத்த தலைமை நிதி அதிகாரியாக தேர்ந்தெடுக்க வழிவகுத்தது.
இதுமட்டும் அல்லாது, மிக குறுகிய காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் நிதியியல் குழுவில் தன்னை முக்கிய பகுதியாக நிலைநிறுத்திக் கொண்டது மூலம் கெவன் பரேக்கின் செயல்பாடுகளை புரிந்துகொள்ள முடிகிறது." என்று ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக் (Tim Cook) தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கெவன் பரேக், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ., பட்டம் பெற்ற மின் பொறியாளர் ஆவார். ஆப்பிளில் சேருவதற்கு முன்பு, தாம்சன் ராய்ட்டர்ஸ் கார்ப்பரேஷன் (Thomson Reuters Corporation) மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் (General Motors) ஆகிய நிறுவனங்களில் பல்வேறு மூத்த தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.