தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈசிஆர் கார் விவகாரம்: கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கைது! - ECR CAR CHASE

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திய சம்பவத்தில் திமுக கொடி கட்டிய கார் உள்பட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் துரத்திய நபர்களுள் ஒருவர், கைது தொடர்பான படம்
காரில் துரத்திய நபர்களுள் ஒருவர், கைது தொடர்பான கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 8:04 AM IST

Updated : Jan 31, 2025, 12:38 PM IST

சென்னை:சென்னை ஈசிஆர் கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜனவரி 25ஆம் தேதி நான்கு பெண்கள் உள்பட ஆறு பேர் சென்ற காரை திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஜனவரி 26ஆம் தேதி கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், இணையத்தில் வைரலான இந்த பதிவு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் செய்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் 126(2) வழிமறித்தல், 296(b) ஆபாசமாகப் பேசுதல், 324(2) பொதுச் சொத்துக்குச் சேதத்தை ஏற்படுத்துதல், 351(2) மிரட்டல் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி ஆய்வு:

முதற்கட்ட விசாரணையில், காரில் சென்று பெண்களைத் துரத்திய அந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்பதைக் கண்டறியக் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கானத்தூர் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக கானத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதையும் படிங்க:கார் வாடகை ஒப்பந்த மோசடி.. போலி விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது..!

5 பேர் கைது:

அப்போது, திமுக கொடி பொருத்திய கார் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார், அந்த வீட்டிற்கு சென்று காரை பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணையில் அந்த காரை பயன்படுத்தி வந்தது சந்துரு என்ற இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. இவர் மீது சேலையூர் மற்றும் பீர்க்கண்காரணை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்துரு வீட்டில் இல்லாததால் அவரது உறவினர்களிடம் காவல்துறை விசாரித்து வந்தனர்.

தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவன் ஒருவரை நேற்று இரவு பொத்தேரி அருகே போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் விடிய விடிய தனிப்படை போலீசார் நடத்தினர். அந்த விசாரணையில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Jan 31, 2025, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details