சென்னை:உணவு, உடை, வாகனங்கள் என வாழ்க்கைக்கு தேவைப்படும் அடிப்படை தேவைகள் தொடங்கி, வாழ்கையையே அமைத்துக்கொள்ள மணமகன், மணமகளை தேடுவது வரை இணையத்தின் பயன்பாடானது இன்றியமையாததாக மாறிவிட்டது.
மேலும், புது முகங்களை சந்தித்து நட்பை ஏற்படுத்திக்கொள்வதற்கும், மனதில் உள்ள பிரச்சனைகளை கூறுவதற்கும் ஆட்கள் இல்லையே என்பவர்களுக்கும்கூட அதுக்கென்ற தனி செயலிகள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதில் பல ஆபத்துகளும் ஒளிந்துள்ளன. அந்த வகையில், டேட்டிங் ஆப் செயலி மூலம் இளம்பெண் ஒருவர் 4 சவரன் நகையை இழந்துள்ள சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு கடந்த நவ.2 ஆம் தேதி, டேட்டிங் ஆப் மூலம் போரூரை சேர்ந்த பிரசாந்த் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மெரினா ஜோடிக்கு ஜாமீன்..! சந்திரமோகனுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட கண்டிஷன்..!
இருவரும் மனம் திறந்து பேசிக்கொண்ட நிலையில், நேரில் பார்க்க திட்டமிட்டுள்ளனர். அன்றைய தினமே இருவரும், கத்திப்பாரா பாலம் அருகே சந்தித்துள்ளனர். இருவருக்கும் இடையே நல்ல விதமாக தொடர்பு ஏற்பட்டதையடுத்து, பிரசாந்தின் காரில் அண்ணா சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். பின்னர் அந்த ஓட்டல் கார் பார்க்கிங்கில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, பெண்ணின் நான்கு சவரன் செயினை தனது கழுத்தில் போட்டுக்கொண்ட பிரசாந்த், சில தினங்கள் கழித்து தருவதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், பலமுறை தொடர்பு கொண்டும் நகையை அவர் திருப்பி தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த பெண் தனது நகையை மீட்டுத் தருமாறு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில், விசாரணை நடத்தி வரும் போலீசார் டேட்டிங் ஆப் செயலி மூலம் பழகி, நகையை ஏமாற்றி எடுத்து சென்ற அந்த நபரை தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்