புதுக்கோட்டை:விஸ்வநாத தாஸ் பகுதியைச் சேர்ந்தவர் உச்சி கார்த்தி (25). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், புதுக்கோட்டை நகரில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சீனி என்பவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருவரும் விரோதிகளாக ஆனதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (பிப்.8) மாலை விஸ்வ நாததாஸ் தெருவில் உள்ள உச்சி கார்த்தி வீட்டில் கட்டுமான வேலைகள் நடைபெற்றதால், அதைப் பார்ப்பதற்காக கார்த்தி வந்துள்ளார். அந்த சமயம் பார்த்து 3 நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து, கார்த்தியை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து கார்த்தி வெளியே ஓடிவந்துள்ளார். இருந்தாலும் கார்த்தியை மூன்று பேரும் விடாமல் துரத்தி வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தம்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடம் வந்த திருக்கோகர்ணம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.