கன்னியாகுமரி:குமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு நோக்கி டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அந்த லாரியை 51 வயதான விருதுநகரைச் சேர்ந்த காளைச்சாமி என்ற நபர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில், வெள்ளமடம் அடுத்த சகாய நகர் பகுதியில் லாரி வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மற்றும் நின்று கொண்டிருந்த டிராக்டர், 4 மற்றும் இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சாலை ஓரத்திலிருந்த ஆர்டின் என்பவருடைய வீட்டு காம்பவுண்ட் சுவரை இடித்து கொண்டு புகுந்துள்ளது. அப்போது, காம்பவுண்ட் சுவரை இடித்துக் கொண்டு சென்ற போது, அங்கு நின்ற சொகுசு காரில் மோதி லாரி நின்றுள்ளது. இந்த விபத்தில் சொகுசு கார், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் ஆகியவை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக டிராக்டர் ஓட்டுநர் ஜெயக்குமார் என்பவர் உயிர் தப்பியுள்ளார். மேலும், டாரஸ் லாரி வீட்டுக்குள் புகுந்ததை அடுத்து, அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார், டாரஸ் லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதேபோல, நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. அந்த லாரியை, கொல்லம் அருகே உள்ள கூறக்கோடு பகுதியைச் சேர்ந்த 24 வயதான அல்டாப் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், லாரி ஆரல்வாய்மொழி அருகே உள்ள முத்து நகரைக் கடந்து தேவசகாயம் மவுண்ட் விளக்கு பகுதியில் வந்த போது, எதிரே காவல்கிணறு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில், லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த குளச்சல் அடுத்த கொட்டில் பாடு கடற்கரையைச் சேர்ந்த 23 வயதான டேனி என்ற டேனியல் என்பவர், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.