புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி, ஈட்டி தெருவைச் சேர்ந்தவர்கள் செல்லக்கண்ணு - நல்லமுத்து தம்பதி. இவரகளது மகன் சண்முகம் (26). இவர் பிஎஸ்சி கணிதம் படித்திருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் கப்பலில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பிரிவில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊரில் உள்ள முனி கோவில் கிடா பூஜைக்கு வந்துவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு பணிக்காகச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 19ஆம் தேதி சிங்கப்பூர் அருகே பெட்ரோபிராங்கா என்னும் இடத்தில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சண்முகம் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சண்முகத்தின் உடல் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், சண்முகத்தின் உடல் வீட்டிற்கு வருவதை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது வீட்டிற்கு முன் கூடினர். பின்னர், வேன் மூலம் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட சண்முகத்தின் உடலை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி கண்ணீர் விட்ட நிலையில், சண்முகத்தின் உடலுக்கு இறுதி காரியங்கள் செய்தனர்.