தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூற்றுக் கணக்கான வீடியோக்கள்.., ஆண் நண்பருடன் தங்கியிருந்த இளம்பெண் மரணம்.. சென்னையை உலுக்கிய க்ரைம்! - CHENNAI TEEN DEATH

சென்னையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பிய இளைஞர் கைது முதல், ஆண் நண்பருடன் அதிக அளவில் மது குடித்த இளம்பெண் மரணம் வரை முக்கிய குற்ற சம்பவங்களின் தொகுப்பு

சென்னை குற்றச் செய்திகள்
சென்னை குற்றச் செய்திகள் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 12:23 PM IST

சென்னை: சென்னையில் ஆண் நண்பருடன் இரண்டு நாட்கள் அறையில் தங்கி இருந்து அதிக அளவில் மது மற்றும் சிகரெட் புகைத்துவிட்டு வெளியேறிய 26 வயது இளம்பெண் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் பியூட்டிஷியனாக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த 5ம் தேதி திருச்சியில் இருந்து பியூட்டிஷன் பணிக்காக சென்னை வந்துள்ளார். இதையடுத்து சென்னை சூளைமேடு சண்முகசாலை கில் நகரில் இளைஞருடன் இரண்டு நாட்களாக தங்கி இருந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி காலை அந்த பெண்ணின் தோழி திருச்சியில் இருந்து சென்னை கோயம்பேடு வந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக அந்த இளம்பெண் ஆட்டோ மூலம் கோயம்பேடு சென்று உள்ளார். அங்கு அவர் தோழியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறிது நேரத்தில், அந்த இளம் பெண்ணுக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தோழி அந்தப் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு இதயத்துடிப்பு மிகவும் குறைவாக உள்ளது விரைவாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இளம் பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாண்டி பஜார் போலீசார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ரபிக் (31) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களாக அறையில் உல்லாசமாக தங்கி இருந்ததாகவும், அப்போது மது அதிகளவில் குடித்ததும், சிகரெட் புகைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முகமது ரபியை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பிய இளைஞர் கைது

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதும், அதனை சமூக வலைதளத்தில் பரப்புவதும் கடும் குற்ற செயல் எனவும், அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிக்னல் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்புவதாக சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்ட சமூக வலைதள கணக்கை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், குழந்தைகள் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிரும் நபர் ஹைதராபாத்தை சேர்ந்த வங்கா ரகுநாத் ரெட்டி என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், சென்னை சைபர் போலீசார் ஹைதராபாத் சென்று அந்த நபரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இதையடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும்ம், அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்களை பெற்று தரும் முக்கிய ஏஜென்ட்கள் ஆறு பேர் கைது:

சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். அதில், இந்திய பயணிகளின் உண்மையான சான்றுகளை மறைத்தும், பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பெற்றோர் விவரங்களை ஏஜெண்டுகள் உதவிகள் உடன் மாற்றம் செய்து, போலியான பாஸ்போர்ட்களைப் பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாகவும், எனவே பயணிகளுக்கு போலி பாஸ்போர்ட் எடுக்க உதவியாக இருக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 'சாய் டூர் அண்ட் ட்ராவல்ஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்த சதீஷ்குமார், கல்லையான் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 'மெட்ரோ ஸ்டுடியோ அண்ட் டிராவல்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த நல்லா முகமது மற்றும் அவருடைய கூட்டாளிகளான பவுசல் ரகுமான், நாசர் அலி, குமார் ஆகியோர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மேலும், இவர்கள் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று பின்னர் பிளாக் லிஸ்டில் சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள் மற்றும் விசா மற்றும் வெளிநாட்டு வேலைகள் அனுமதி கிடைக்காததால் எமர்ஜென்சி சர்டிபிகேட் மூலம் இந்தியா அனுப்பப்பட்ட நபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து அவர்களின் ஆதார் கார்டுகளில் உள்ள உண்மையான பிறந்த தேதியை இ சேவை மையம் மூலமாக போலியான தகவல்களை சமர்ப்பித்து மாற்றம் செய்து ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்தது தெரிய வந்தது.

மேலும், இந்த போலி சான்றிதழ்கள் மூலம் போலியான இந்திய பாஸ்போர்ட்களை பெற்று கொடுத்தும், விசா ஏற்பாடு செய்தும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு இவர்கள் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு மடி கணினிகள், ஒரு லேப்டாப், ஆறு செல்போன்கள், 54 பாஸ்போர்ட்கள் மற்றும் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்த நபர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்த பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு பின்பு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 54 இந்திய பாஸ்போர்ட்களில் உண்மை தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு உடன், கணினி வழி பிரிவும் இணைந்து விசாரணை மேற்கொள்வதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details