சென்னை:உலக கடல்சார் தொழில்நுட்ப காங்கிரசின் ஒத்துழைப்புடன் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு' 15 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை இம்மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட விரைவான தொழில்நுட்ப சீர்குலைவுகள் மற்றும் உலகளாவிய கப்பல் மற்றும் அதன் வர்த்தகம் குறித்த தாக்கத்தை மையமாகக் கொண்டு தற்போது எழுந்துள்ள சவால்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.
மேலும், காலநிலை மாற்றம், நிலைத்தன்மை, புவிசார் அரசியல், இயக்கவியல் மற்றும் கடல்சார் தொழில்துறையின் தாக்கங்கள் போன்ற முக்கிய தலைப்புகளில் 3 நாள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க:குடும்ப அட்டைதாரர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5000; புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!
இந்த மாநாடு குறித்து ஏற்பாட்டு குழுவின் தலைவர் வி.சுப்பாராவ் கூறும்போது, “கப்பல் போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் ஷியாம் ஜெகநாதன், இந்திய கப்பல் பதிவாளர் அலுவலக செயல் தலைவர் அருண் ஷர்மா உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தொழில்நுட்ப, வணிக மற்றும் சந்தை சிக்கல்களை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. டிஎம்ஜிஎஃப்-இல் நாளை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் கோல்ஃப் விளையாட்டு போட்டியில் பிரதிநிதிகள் பங்கேற்கலாம்” என தெரிவித்தார்.