திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரியா (23). இவர் அதே பகுதியில் வைரமணி என்பவர் நடத்தி வரும் தெய்வமகள் என்ற மகளிர் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து கடன் பெற்று, அதனை தொடர்ந்து திருப்பிச் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தக் குழுவில் 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரியா மகளிர் குழுவில் இருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், அவர் ஏற்கனவே கொடுத்த ஆவணங்களைப் பயன்படுத்தி திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா மற்றும் சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இரண்டு வங்கிகளில் மகளிர் குழு தலைவி வைரமணி பிரியாவுக்கு தெரியாமல் அவரது பெயரில் சுமார் 3 லட்சம் கடன் பெற்று கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் இரண்டு வங்கிகளில் இருந்தும் கடன் தொகை செலுத்துமாறு பிரியாவுக்கு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்,க் வைரமணியிடம் சென்று வங்கிக் கடன் குறித்து கேட்டுள்ளார். அப்போது வைரமணி சரியான முறையில் பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரியா ஊர் முக்கியஸ்தர்களிடம் இது குறித்து தெரிவித்து அவர்களை அழைத்துச் சென்று கேட்ட போது, அவர்களையும் வைரமணி உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது.