சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகமத்தின் சார்பில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடிக்கு, திருமங்கலம், பாடி, லூகாஸ், அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக இயக்கப்படும் பேருந்து ANI 3014 வண்டி எண் TN01 N 8937, வழித்தடம் எண் 70A பேருந்தானது, ஒரு நாளைக்கு கோயம்பேட்டிலிருந்து ஆவடிக்கும், ஆவடியிலிருந்து கோயம்பேடுக்கும் சுமார் 14 முறைகள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 30) இரவு 07.30 மணிக்கு, கடைசி பயணமாக ஆவடிக்கு கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம் வழியாக ஆவடி நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது, அண்ணா நகர் மேற்கு பேருந்து பணிமனை பேருந்து நிறுத்தம் அருகே, பேருந்தின் கதவு திறக்கும் பொழுது முன்பக்க கதவு கழன்று விழுந்து விபத்துக்குள்ளானது. முன்பக்க பாதி கதவு கழன்று விழுந்ததில், பெண் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் தகவலறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், குறிப்பிட்ட பேருந்து, 2022இல் காலாவதியாகி, அதன் பின் மேலும் 2 ஆண்டுகள் கூடுதலாக இயக்க அனுமதிக்கப்பட்ட பேருந்து எனவும், வரும் செப்டம்பர் மாதம் வரை பேருந்தை இயக்குவதற்கு திட்டமிடப்பட்ட பேருந்தின் முன் பக்க கதவு கழன்று விழுந்ததாகவும். பேருந்தில் பயணித்த அம்பத்தூர் புதூரைச் சேர்ந்த சுகன்யா (45) என்பவருக்கு வலது தோள்பட்டையில் கீறல் ஏற்பட்டு இரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்பட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து ஏற்படுத்திய பேருந்து அண்ணா நகர் மேற்கு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஈரோடு கார் விபத்து: நேருக்கு நேர் மோதிய கார்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு - Sathyamangalam Car Accident